உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை! தென்காசி விழாவில் எடப்பாடி பேச்சு

தென்காசி:

தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை, தேர்தலுக்கும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது, அது தொடங்கி வைக்கப்படுவது தொடர்பான அறிவிப்புகள் அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக மாவட்டங்களை பிரித்தால் எப்படி தேர்தல் நடத்த முடியும் என  கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில்,  தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட உரையாற்றினார்.

“தென்காசி மாவட்ட மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.  உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நபெறும் என்று கூறியவர், ள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மாவட்டத்தில் உள்ள  செண்பகவள்ளி அணைக்கட்டு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், 2018 – 10 ல் குடிமராமத்துப் பணிக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த நிதி மூலம்   தமிழகம் முழுவதும் குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்றார்.

மாவட்டந்தோறும் நடைபெறும்,  முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் மனு அளித்துள் ளனர். அதில் 5,11,186 மனுக்கள் மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் என்றாலும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறியவர், ஏழைகளுக்கு ஏற்ற அரசாக அதிமுக அரசு  தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்று கூறினார்.

தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் பெறுவதற்காகவே மத்திய அரசுடன் அதிமுக  அரசு இணைக்கமாக  இருந்து வருவதாக கூறியவர், அதனால்தான், தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இது அதிமுக அரசின் மிகப்பெரிய சாதனை. அதேபோல் நெகிழிக்கு தடை விதித்து நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது என்று கூறினார்.

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்று திமுகவை சாடியவர்,  அதிமுக அரசு பேரவையில் 110 விதியின் கீழ்அறிவித்த 453 அறிவிப்புகளில் 88 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள  280 அறிவிப்புகளில் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துள்ளது. 74 அறிவிப்புகள் திட்ட அனுமதிக்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது”.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.