புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டின் டவோஸ் நகரில் செயல்படும் உலக பொருளாதார மன்றத்தைப் போலவே, இந்தியாவிலும் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இதன்மூலம், இந்தியாவை நோக்கி அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச நிதி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தியாவிற்கான நன்மைகளைப் பெற முடியும்.

ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் திகழும் சீனா, தன் சார்பாக, போவோ ஃபோரம் என்ற அமைப்பை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, இந்தியாவின் அரசியல் மற்றும் வியாபார போட்டியாளராக கருதப்படுகிறது என்பது அறிந்ததே.

இத்தகைய ஒரு அமைப்பு என்பது பிரதமர் மோடியின் ஒரு தனிப்பட்ட ஆவல். ஏனெனில், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதே, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியவர். இதை வேறுபல இந்திய மாநிலங்களும் பின்பற்றின.