மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை! புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ

டெல்லி:

புதிய கல்விக்கொள்கை  குறித்து மாநிலங்களில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை,  மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை’  என்று கடுமையாக சாடினார்.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 18ந்தேதிமுதல் நடைபெற்று வருகிறது.  இன்று மாநிலங்களவையில்  கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வைகோ குறுக்கிட்டு பேசினார்.

அப்போது,  இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்ட மாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை”,  “நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்து கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

வைகோவின் பேச்சுக்கு  மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார், அப்போது,  “இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரிடம் கேள்வி விடுத்த வைகோ,  நீங்கள் நடத்திய விவாதங்களின் போது,  “எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே” என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில்,  அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, 0வைகோ உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது, உட்காருங்கள் என கூறி அமர வற்புறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த வைகோ,  ” உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.