கொரோனா காரணமாக உலகமே முக கவசம் அணிய தொடங்கியதை தொடர்ந்து, வித்தியாசமாக யோசித்த ஜப்பானில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனம் ஒன்று, ‘முக’ வடிவில் உள்ள முக கவசத்தை தயாரித்துள்ளது.

முப்பரிமாண வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முக கவசத்தை அணிந்து கொண்டு வரும் நபரை, எந்த பக்கம் இருந்து பார்த்தாலும், அவர் முக கவசம் அணிந்திருப்பது கண்டுபிடிக்க முடியாது.

இந்த முகத்தை வடிவமைக்க ‘மாடலாக’ இருந்தவருக்கு 30,000 ரூபாய் வழங்கியதாக கூறும் இந்த கடை முதலாளி ஷுஹெய் யோகாவாரா, இந்த முக கவசத்தை 70,000 ரூபாய்க்கு விற்க இருப்பதாக கூறுகிறார்.

குறைந்த அளவு முக கவசங்களையே தற்போது தயாரித்துள்ளதாக கூறும் யோகாவாரா, உலகெங்கிலும் இருந்து மக்கள் இதுபோன்ற முக கவசம் வேண்டும் என்று கேட்பதால், விரைவில், மேலும் பல ‘மாடல்களை’ வைத்து நிறைய முக கவசங்களை தயாரிக்க போவதாக கூறுகிறார்.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க இந்த முக கவசம் எந்த விதத்தில் உதவும் என்பது தெரியவில்லை என்றாலும், இந்த வகை முக கவசங்கள் மேடை நாடகங்களுக்கும், திரைப்பட துறையினருக்கு மட்டுமே உதவும்.

1965-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆசை முகம்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். போன்று முககவசம் அணிந்துகொண்டு எஸ்.வி. ராமதாஸ், எம்.ஜி.ஆரின் நற்பெயருக்கும் அவரை மணக்க இருந்த சரோஜா தேவியின் கனவையும் கலைக்கும் முயற்சியில் அந்த திரைப்படத்தில் ஈடுபடுவார்.

திரைப்படத்தில், இதுபோன்ற காட்சிகளை நாம் பல படங்களில் பார்த்திருப்போம், நிஜத்தில் இதுபோன்ற முக கவசங்கள் வர ஆரம்பித்தால் என்னவாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.