புதுடெல்லி: வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போருக்கு ஒரு புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்களின் அலுவலகத்தைச் சார்ந்திருப்பதற்கு இனி தேவையிருக்காது.

இதற்கு முன்னதாக, வைப்புநிதி கணக்கில் பணம் எடுப்பதற்கான யுஏஎன் நம்பருக்காக, சம்பந்தப்பட்ட நபர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தை சார்ந்திருக்கும் தேவையிருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதியின் மூலமாக, பயனர்கள் தாங்களே யுஏஎன் நம்பரை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதற்கான வசதி, EPFO இணையதளத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோருக்கு, பணியாளர் வருங்கால வைப்பு நிதியகத்திலிருந்து, EPFO இணையதளத்தில் யுஏஎன் எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் எண் வழங்கப்படும்.

இதன்மூலம் ஒரு ஊழியர், தனது பணிபுரியம் காலகட்டத்தில், எத்தனை நிறுவனங்கள் மாறினாலும், அவரின் PF எண் மட்டும்தான் மாறுமேயொழிய, UAN மாறவே மாறாது. மேலும், தற்போதைய புதிய நடைமுறைகளின்படி, பான் நம்பர், ஆதார் நம்பர் ஆகியவை, UAN அக்கவுண்ட் நம்பருடன் சேர்க்கப்படுவதால், அதே எண்தான் ஒருவரின் பணி ஓய்வு காலம் வரை, இணையத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.

இதுதவிர, EPFO இணையதளத்தில், மாத ஓய்வூதியாளர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை, டிஜி லாக்கரிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதான ஒரு புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளையின் 67வது தினத்தில் இந்தப் புதிய வசதிகளைத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.