சென்னை

டிஜிடல் ஒளிபரப்புக்கு அதிக பணம் வாங்குவதால் இன்று முதல் புதுத் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

தென் இந்தியாவில் பெரும்பான்மையான திரையரங்குகளிலும் கியூப் நிறுவனம் மூலம் டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் ஒளிபரப்பப் பட்டு வருகின்றன.    இந்த நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் குறை கூறினார்கள்.   அதையொட்டி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்று அது தோல்வியில் முடிவடைந்தது.    அதையொட்டி தென் இந்திய மொழித் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டமைப்பை அமைத்தனர்.

அந்த அமைப்பு ஏற்கனவே அறிவித்தபடி இன்று (மார்ச் 1 முதல்)  வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும்,  ஒரு சுமுக முடிவு வரும் வரை எந்த புதுத் திரைப்படங்களும் வெளியிடப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.   இனி கியூப் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை கிடையாது எனவும்  திரையரங்கு உரிமையாளர்கள் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு தேவையான சர்வர்களை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தயாரிப்பாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது.   திரையரங்குகள் வழக்கப்படி வெளியிடப்ப்டும் என தெரிவித்துள்ளது. சங்கம், “புதுப் படங்கள் வெளியிட அளிப்பவர்களிடம் இருந்து புதுப்படங்கள் பெற்று திரையிடப்படும்.   அவ்வாறு கிடைக்காது எனில் ஏற்கனவே உள்ள பழைய படங்கள் மற்றும் மாற்று மொழி திரைப்படங்களை வெளியிடுவோம்”  என அறிவித்துள்ளனர்.    இதற்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.