மதுரை:

துரை அருகே உள்ள திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அடிக்கல் நாட்டினர்.

தமிழகத்தில் ஏற்கெனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிலையில், மேலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி முதல்கட்டமாக நிதியும் ஒதுக்கியது. அதன்படி,  ராமநாதபுரம், விருதுநகர் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பகுதிகளில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பணிகளை தமிழகஅரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல்லில் ரூ.327 கோடியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காக   திண்டுக்கல்லை அடுத்து, அடியனூத்து ஊராட்சியில் 8.61 ஏக்கரில் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது.  இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.