நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்!

டில்லி,

நாடு முழுவதும் ஒரே வகையான வரியை அமல்படுத்தும்  நடைமுறையான ஜிஎஸ்டி வரிமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

இதன் காரணமாக சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத புதிய வரலாற்றை படைத்துள்ள மோடி தலைமையிலான மத்தியஅரசு.

சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய வரி சீர்திருத்ததை செய்து வரலாறு படைத்துள்ளது மோடி அரசு.

 

01//07/2017 முதல் நாடு முழுவதும் ஒரே வகையான வரி விதிப்பு முறையை நேற்று நள்ளிரவு நடைபெற்ற பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  தொடங்கி வைத்தனர்.

ஜி.எஸ்.டி. அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், முக்கிய அதிகாரிகள், திரையுலகை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் உள்பத ஏராளமான விஐபிக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி, பல்வேறு மாநில அரசுகள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். கட்சிகளின் பார்வையை கடந்து நாட்டின் ஜனநாயகத்தை இச்செயல்பாடு வலுப்படுத்தியதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

சரியாக 12 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் பட்டனை அழுத்தி ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒரே வரி, ஒரே நாடு, ஒரே சந்தையை புதிய இந்தியா உருவாக்கும் , அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, பல்வேறு கட்சிகள் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டிருப்பதாக அருண்ஜெட்லி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்பட்டிருந்தபோதும் அவர் பங்கேற்கவில்லை. மேலும் பிரதான எதிர்க்கட்சியான  காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி விழாவை புறக்கணித்தன.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கிடையே புதிய வரலாறை படைத்துள்ளது மோடி அரசு.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டவுடன், நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்கம் அளிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த ஜிஎஸ்டி மூலம் என்னென்ன மாற்றம் ஏற்பாடும், விலைவாசிகள் உயருமா, குறையுமா என்பது ஒருசில நாட்களில் தெரிய வரும்.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு, அனைத்து வகையான பரிவர்த்தனைக்கும்  ஆதார் கார்டு இணைப்பு போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, இந்திய வரலாற்றில் புதிய சாதனைகைளை கல்வெட்டுகளாக பதிய வைத்துள்ளது.