21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் ஜடேஜா! – தேர்வுசெய்தது விஸ்டன்!

மும்பை: ‘விஸ்டன்’ இதழ் சார்பாக, இந்தியளவில், 21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா.

இவர், உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாமிடம் பிடித்தார். இவர் மொத்தம் 97.3 புள்ளிகள் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் சார்பாக வெளியாகிறது ‘விஸ்டன்’ எனப்படும் இணையதளப் பத்திரிகை. இந்த பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில்தான் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா.

இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல், இந்திய அணிக்காக மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்று, 213 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதோடு, அணிக்காக 1869 ரன்களையும் குவித்துள்ளார்.

இவரின் பந்துவீச்சு சராசரி 24.62 ஆகும். இது ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் ஷேன்வார்னைவிட அதிகம். மேலும், ஜடேஜாவின் பேட்டிங் சராசரி 35.26 ஆகும். இது ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனைவிட கூடுதல்.

இதுகுறித்து ஜடேஜா கூறுகையில், “இந்தியாவிற்காக விளையாடுவதே ஒரு கனவு. அப்படியிருக்கையில், மதிப்புவாய்ந்த வீரர் என்ற கவுரவமும் சேர்த்து கிடைக்கையில், நான் மிகுந்த அதிர்ஷடசாலியாக உணர்கிறேன். இதன்பொருட்டு, ரசிகர்கள் மற்றும் சகவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றுள்ளார் ஜடேஜா.