சென்னை:

முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு மூத்த அமைச்சர் நல்ல கண்ணுவுக்கும் விரைவில் வேறு வீடுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.

சென்னை தி.நகரில் அமைந்துள்ள  குடியிருப்பு வாரிய வீடுகள் 25 ஆண்டுகளுக்கு மேலான படியால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அதன்காரணமாக அதை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர அரசு முடிவெடுத்துள்ளது. அந்த குடியிருப்புகளில்  10 ஆண்டுகளுக்கும் மேலாக  முன்னாள் தமிழக அமைச்சர் மறைந்த கக்கனின் குடும்பத்தினர் மற்றும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரையும் வீட்டை காலிய செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை, திமுக,  கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியலாக்கி பிரச்சினைகளை உருவாக்கியது. இது மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில், மாத வாடகைக்கு வீடுகள் வழங்குவதற்கு, வழிவகை செய்யப்படும் என, தமிழ்நாடு அரசு உறுதியளித்திருக்கிறது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடு பிரச்சினை தொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருக்கிறது. அப்போது, கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, நல்லகண்ணு கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு, தாங்களும், கக்கன் குடும்பத்தினரும், குடியிருந்த குடியிருப்பு, மிகவும் பழுதடைந்து இடிக்கப்படக்கூடிய அவசியம் எழுந்துள்ளதால், விரைவில், நல்ல முறையில் உள்ள குடியிருப்பு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.