ஊரடங்கின்போது காவல்துறையினர் லத்தி வைத்திருக்கவோ, மக்களைத் தாக்கவோ கூடாது – புதிய அறிவுறுத்தல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்கக்கூடாது என்றும், பொதுமக்களை அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களின் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்வதற்காக வெளியில் செல்லும் மக்களிடம் காவல்துறையினர் பலர் அராஜகமாக நடந்துகொள்வதாகவும், அவர்களைத் தாக்குவதாகவும் சமூக வலைதளங்களில் பல புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

காவல்துறையின் இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்ற புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி தரப்பிலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தங்கள் கைகளில் லத்தி வைத்திருக்கக்கூடாது. மக்களுக்கு தெளிவாகப் பேசி புரிய வைக்க வேண்டும். பொதுமக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது. அப்படி செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

மக்களிடம் சமூக விலகல் குறித்து தெளிவாகப் பேச வேண்டும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் சார்பில் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.