சபரிமலையில் ஐயப்பனின் வாழ்க்கை வரலாறுகளை குறிக்கும் விதமான புதிய சிற்பங்களை அமைத்து, பம்பா நதிக்கரையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு மண்டல கால பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. நவம்பர் 17ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்க உள்ளதால், கோவிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முதல் சமீபத்திய பருவமழை வரை, தொடர்ந்து இடைவேளி விட்டு பெய்த மழை காரணமாக பம்பையில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பம்பை நதி பகுதியில் மணல் குவிக்கப்பட்டிருந்தது. பம்பை நதி பாலமும் சேதமடைந்ததால், அதை சரிசெய்யும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில், ஐயப்பனின் வரலாற்றை குறிக்கும் விதமாக பம்பா கனபதி கோவில் அருகே சிற்பங்களை அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஓரீரு தினங்களில் இப்பணிகள் முடிவுக்கு வரும் என்றும், பக்தர்கள் ஐயப்பனின் வரலாற்றை எளிதாக புரிந்துக்கொள்ளும் வண்ணம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.