பிளாரிடா: இந்தப் பூமியில் வாழ்வதையே நரகமாக நீங்கள் கருதினால், உங்களின் முடிவு தவறானது என்று கூறும் வகையில், ஒரு புதிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரும் அந்த கிரகத்திற்கு K2-141b என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். அந்த கிரகம் மிக வெப்பம் வாய்ந்த கிரகமாக திகழ்கிறது.

பூமியிலிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள அந்த கிரகத்தில் இருக்கும் சமுத்திரங்கள், உருகிய லாவாக்களால் உருவாகியுள்ளன. அங்கு காற்று சூப்பர்சானிக் விமான வேகத்தில் வீசுகிறது மற்றும் பாறை மழை பொழிகிறது.

இதை ஒரு வினோத கிரகமாகவும், இதை ஒரு நரகமாகவும் குறிப்பிடுகிறார்கள் விஞ்ஞானிகள். இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே, இது மிகவும் வேறுபட்ட ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த K2-141b கிரகத்தின் சூழல் மற்றும் பருவநிலை என்பது மிகவும் வினோதமானது என்கின்றனர் விஞ்ஞானிகள். புவியின் அளவுகொண்ட இந்த கிரகத்தின் தரைதளம், சமுத்திரங்கள் மற்றும் சூழல் ஆகிய அனைத்தும் பாறைகளால் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.