லக்னோ: மாட்டிறைச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிகரித்துவிட்டதால், உத்திரப்பிரதேச சட்டக் கமிஷன் குற்றவாளிகளுக்கான கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆதித்யநாத் மிட்டல், இந்தப் பரிந்துரைகள் அடங்கிய வரைவை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினார். இந்த வரைவில் குற்றவாளிகள் மட்டுமல்ல, குற்றம் நடக்கும் பகுதியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்குமான தண்டனைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பரிந்துரைகளின் விபரங்கள்

* தாக்கப்படுபவர் காயமடைந்தால், குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம்

* தாக்கப்பட்டவர் மோசமாக காயமடைந்திருந்தால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம்

* தாக்கப்பட்டவர் இறந்துபோனால், ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம்

* இந்தக் குற்றத்திற்காக திட்டம் தீட்டியவர்களுக்கும், குற்றவாளிகளுக்கு சமமான தண்டனை

* இத்தகைய குற்றங்கள் தொடர்பாக அலட்சியம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் ரூ.5000 வரை அபராதம்.

ஆனால், இத்தகையப் பரிந்துரைகளை அரசு ஏற்குமா? அல்லது கிடப்பில் போடுமா? அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ளுமா? என்பது அரசின் கைகளில்தான் உள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய நடைமுறை சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தாலேயே, புதிய சட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.