ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டின் புதிய சட்டத்தை மேற்கோள்காட்டி, பாலி தீவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். இதனால், பாலி தீவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது.

இந்தோனேஷியா வரும் திருமணமாகாத சுற்றுலாப் பயணிகள் உடலுறவு கொண்டால், அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது.

இதனையடுத்து, அந்நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு இநத் சட்டம் தொடர்பாக எச்சரிக்கை விடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.

பொதுவெளியில் திருமணமாகாத காதலர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய அத்துமீறல்கள் அந்நாட்டின் பொதுமக்களை பாதிப்பதாக உள்ளதால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவு உலகெங்கிலுமிருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகும். இந்நிலையில், அந்நாட்டு அரசாங்கம் கொண்டுவந்துள்ள இச்சட்டத்தால் அந்நாட்டின் சுற்றுலா வருமானம் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.