புதிய தலைவர் தேர்வு? இன்று காலை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதான விஷயமாக, கட்சித் தலைவர் பதவி குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்,  காங்கிரஸ் கட்சிக்கு,  களத்தில் இறங்கி  சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய முழுநேர தலைமை தேவை எனவும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யுமாறும் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.  ந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, மிலிந்த் தியோரா உள்பட முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்து போட்டுள்ள அந்த கடிதத்தில், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காரிய கமிட்டியை புதுப்பிக்குமாறும், தலைமையின் நிச்சயமற்ற தன்மை காங்கிரஸ் தொண்டர்களுக்கு மனச்சோர்வை அளிப்பதாகவும், தற்போதைய இடைக்காலத் தலைவர் சோனியா மீது அதிருப்தி தெரிவிக்கும் வகையில் கூறப்பட்டது.

இது காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ’கட்சித்தலைவருக்கான கடமைகளை செய்ய இனியும் நான் விரும்பவில்லை’ என்று  அவர் கூறியதாக தலைநகர் வட்டார தகவல்கள்  தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்,  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது. இதில், நாடு சந்தித்து வரும், கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வேலையில்லா திண்டாட்டம்,  தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அத்துடன், கட்சி தலைவரை நியமிக்ககும்படி சோனியா  வேண்டுகோள் விடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே,  நேரு குடும்பத்தினர் யாரையும் கட்சி பொறுப்புக்கு வலியுறுத்த வேண்டாம் என்று பிரியங்கா கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

தலைவர் பதவியை பிடிக்க  காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைமை பற்றிய முடிவு எடுக்கப்படுமா? புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.