வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மீனவர்களுக்கு எச்சரிக்கை

 சென்னை:

ங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கடலில் 8-ம் தேதி இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்  என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடமேற்கு தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இரணியலில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நாகர்கோவில்-8 செமீ, மைலாடி-6 செமீ, தக்கலை 5 செமீ, வல்லம், கொத்தவச்சேரி, குறிஞ்சிப்பாடியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல், லட்சத்தீவு, கேரளா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.