சென்னை: செம்பரம்பாக்கம்(ஏரி) நீர்த்தேக்கத்தை முறையாகப் பராமரித்து நிர்வாகம் செய்யும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் நிலையில், நாட்டின் பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த ஆபத்தைப்போல் இந்தாண்டும் ஏற்பட்டுவிடாத வகையில் ஒரு செயல்திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்த்ததைவிட அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டால், நீர்த்தேக்கத்திற்கு வந்துசேரும் அதிகளவு நீரை எப்படி கையாள்வது என்பது குறித்து ஒரு செயல்திட்டம் இதுவரையில் கைவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டில், வெறும் 2 நாட்களில் மட்டும் 474 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால், நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் திறந்துவிடப்பட்டதால், சென்னையின் பாதி பகுதிகள் நீரில் மூழ்கின. ஏரிக்கு 90 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் வந்துகொண்டிருந்த நிலையில், 124 மில்லியின் கியூபிக் மீட்டர் நீரை திறந்துவிட்டு வெள்ளத்தை ஏற்படுத்தினர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

எனவேதான், இத்தகைய சிக்கல்களை களையும் வகையில், ஒரு முன்னெச்சரிக்கை வகையிலான செயல்திட்டத்தை அண்ணா பல்கலையின் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.