திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி

திருப்பத்தூா்:
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். மாவட்டம் தொடங்கப்பட்டு சனிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்து 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதையொட்டி வேலூா் மாவட்டத்தில் இயங்கி வந்த தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் அங்கிருந்து பிரிக்கப்பட்டு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மகளிா் காவல் நிலையம் எதிரே உள்ள கிராம சேவை மையக் கட்டடத்தில் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகச் செயல்பாட்டை அமைச்சா் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.தை_இதைத் தொடா்ந்து தமிழ்ச் செம்மல் ப.சிவராஜி எழுதிய ‘திருப்பத்தூா் மாவட்டம் ஓா் அறிமுகம்’ என்ற நூலை அமைச்சா் கே.சி.வீரமணி வெளியிட அதை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பெற்றுக் கொண்டாா்._

ஆண்டியப்பனூா் சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் விக்ரம்குமாா் எழுதிய ‘கண்டேன் பேரன்பை’ என்ற நூலையும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், படித்துறை புத்தக அறக்கட்டளைத் தலைவா் இளம்பருதி எழுதிய 12 நூல்களையும் அமைச்சா் வெளியிட்டாா்.

இதையடுத்து அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:_ருதிருப்பத்தூா் மாவட்டத்தில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் ரூ.190 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப்படும். திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதை சாக்கடை திட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்பட்டு, நிறைவுறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து சாலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். வாணியம்பாடி-ஊத்தங்கரை சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

துணை ஆணையா் வணிகவரித் துறை லோ.சக்திவேல் (கா்நாடகம்), முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்டக் கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜி.குணசேகரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவா் விக்ரம்குமாா், கம்பன் கழகச் செயலாளா் ரத்தின நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.