டில்லி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் வரிசையில் நின்று கட்டணத்தை செலுத்தி விட்டு அந்த சுங்கச் சாவடியை தாண்டி செல்ல வேண்டி உள்ளது.  இதனால் மிகவும் நேரம் விரயம் ஆவதாக பலர் புகார் அளித்துள்ளனர்.    இதை ஒட்டி அரசு பல முறைகளை ஆராய்ந்தது.   அதில் ஒன்றாக வாகனங்களை சுங்கச் சாவடிகளில் நிறுத்தாமல் பணம் செலூத்தும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக சுங்கச் சாவடி வழியே செல்லும் வாகனங்களுக்கு பிரிபேய்ட் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு அதற்கான உரிமம் ஒன்று வழங்கப்படும் நடைமுறை உள்ள்து.  அதே போல வங்கிப் பணப் பரிமாற்றம்,  கடன் அட்டைகள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை பயன்படுத்தி நேரடியாக சுங்கக் கட்டணம் செலுத்த ஒரு செயலி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இந்த செயலி மூலம் பணத்தை செலுத்தி விட்டு நிறுத்தாமல் பயணம் செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் சோதனை அடிப்படையில் ஒரு சில தேசிய நெடுஞ்சாலைகளில்  இந்த முறை அறிமுகப் படுத்தப்பட்டு பரிசிலிக்கப் படும் என தெரிய வந்துள்ளது.   இந்த செயலியை தரவிறக்கம் செய்வோர் தங்கள் வாகனம் குறித்து அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.   பதிவு செய்யப்பட்ட பயணிகள் பயணத்தை தொடங்கும் போதே வழியில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளின் கட்டணத்தையும் இந்த செயலி மூலம் செலுத்தி விடலாம்.   சுங்கச் சாவடியை கடக்கும் போது இந்த செயலியின் கியுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதுமானது.