புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் புதிய தேசிய தலைவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார் தற்போதைய தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா.

பாரதீய ஜனதாவைப் பொறுத்தவரை ஒருவர் இரண்டு பதவிகளில் இருத்தல்கூடாது என்பது விதி. ஆனால், அந்த விதியை மீறித்தான் அமித்ஷா தற்போது இரண்டு பதவிகளில் இருந்து வருகிறார். பெயரளவுக்கு ஜே.பி.நட்டாவை செயல் தலைவராக நியமித்துள்ளனர்.

இந்நிலையில், புதிய தேசிய தலைவர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற அறிவிப்பு அமித்ஷாவின் மூலமாக வெளியாகியுள்ளது.

“நான் கடந்த 2014ம் ஆண்டு தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், எனக்குப் பின்னால் இருந்து ஒரு சூப்பர் பவர் இயக்கும் என்றார்கள். ஆனால், அந்தப் பேச்சு பொய்த்துப்போனது. கட்சித் தலைமைப் பொறுப்புக்கான நபரை தேர்வு நடந்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் பட்னாவிஸ் தலைமையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். அவர் மீண்டும் அங்கே ஆட்சிக்குத் தலைமை தாங்குவார்” என்றார்.