சென்னை,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜியோ)  அறிவித்து உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தியது. பின்னர் கோர்ட்டு எச்சரிக்கையின் பேரில், அவர்களது போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்து உள்ளது. நேற்று மதுரையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம்  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஏற்கனவே நடைபெற்ற  வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள்மீது காவல்துறையினர் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளைத் திரும்ப பெறாவிட்டால், அதை எதிர்த்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் டிசம்பர் 21ம் தேதி வழக்கு தொடரப்படும்.

மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை இந்த (டிசம்பர்) மாதத்திற்குள் அரசு ரத்து செய்யாவிட்டால், ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜனவரி நான்காவது வாரம் முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

மேலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.