சென்னை

சென்னை நகரில் உள்ள புழல் சிறையில் குடிநீர் பஞ்சத்தை போக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் மிகவும் அதிகரித்துள்ளது.  குறிப்பாக சென்னை நகரில் குடிநீர் விநியோகம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் மிகவும் வரண்டு போனதே இதற்கு காரணம் ஆகும். அது மட்டுமின்றி தற்போது மழை பெய்யவில்லை எனினும் மழை பெய்த காலங்களில் மழை நீர் சேகரிப்பு சரியான முறையில் நடைபெறவில்லை.

சென்னை புழல் சிறையில் இந்த குடி நீர் பஞ்சத்தின் தாக்க சிறிதும் இல்லாதபடி புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புழல் சிறையில் சுமார் 3000 கைதிகள் உள்ளனர். புழலில் அமைந்துள்ள மத்திய சிறை வளாகத்துக்கு அருகில் தமிழக காவல்துறையினர் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இங்கு குடியிருக்கும் காவல்துறையினருக்கும் குடிநீர் விநியோகம் சிறை வளாகத்தில் இருந்தே நடைபெறுகிறது.

இந்த சிறை வளாகத்தினுள் ஒரு செயற்கைக் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வெட்டப்பட்ட இந்த குளம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கபட்டுள்ளது. இந்த குளத்தில் மழை நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் சேகரிக்கப்பட்டு வருடம் முழுவதும் பயன்படுத்தப் படுகிறது.  இந்த குளத்து நீரினால் இந்த பக்கத்தில் நிலத்தடி நீர் மட்டும் பெரிதும் உயர்ந்துள்ளது.

இந்த நீரை நேரடியாக பயன்படுத்த முடியாது என்பதால் இந்த குளத்தை சுற்றி 16 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் சுத்தமான நீர் கிடைக்கிறது. அதிலிருந்து பம்புகள் மூலம் தினமும் 3 லட்சம் லிடர் நீர் எடுக்கப்பட்டு சிறையிலும் காவலர் குடியிருப்புகளிலும் பயன்படுத்த படுகிறது.

அது மட்டுமின்றி இந்த குளத்தில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. குளத்து நீரைக் கொண்டு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தினமும் 200 கிலோ வரை காய்கறிகள் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த மீன்களும் காய்கறிகளும் இதே வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் விற்கப்படுகின்றன.