எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:

தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட விவகராத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனுார், காரணம்பேட்டை சாலையில் இருந்த, ‘டாஸ்மாக்’ கடையை மூடிய அதிகாரிகள், 1.5 கி.மீ., தள்ளி, அய்யன்கோவில் சாலையில், புதிய கடை திறக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், சாமளாபுரம் பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக குடும்பத்தினருடன் வந்த சூலுார், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கனகராஜை சிறைப் பிடித்தனர்.

இதையடுத்து அங்கு திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் காவல்துறையினர் வந்தானர். . திடீரென அவர்கள்  போராட்டம் நடத்திய பெண்கள் மீது தடியடி நடத்தினர்.

பெண்ணை தாக்கிய பாண்டியராஜன்

காவல்துறையினருக்கு தலைமை ஏற்றிருந்த பாண்டியராஜன், போராட்டத்தல் கலந்துகொண்ட பெண்களை கடுமையாக பேசியதோடு, தாக்கவும் செய்தார். இதில் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் அறைந்த காட்சி, சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார். ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், மற்றும் அப்பகுதி பெண்களிடமும் அவர் விசாரித்தார்.
பிறகு  விசாரணை அறிக்கையை அவர் கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே பாண்டியராஜன் செயல் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது. மேலும்,  ‘போராடிய பொதுமக்கள் மீது, போலீசார் ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர்; இதற்கான காரணம் என்ன என்பது குறித்த, விரிவான அறிக்கையை, தலைமை செயலர், டி.ஜி.பி., மற்றும் திருப்பூர் மாவட்ட, எஸ்.பி., உமா ஆகியோர், இரு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

மேலும்  இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., விசாரணை நடத்தி, ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

.இதனால் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாமளாபுரம் பகுதி மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் பாண்டிய ராஜனுக்கு ஈரோடு மாவட்ட அதிரடிப்படை  போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடேய கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதும் விவகாரம் ஆகியுள்ளது.

சட்டப்படி இது தவறு என்றும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது குறித்து முதல்வர் , உள்துறை செயலர் , டிஜிபி ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் என்றும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை மூவருக்கும் இருக்கிறது என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மெஜாரிட்டி சிக்கலில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பாண்டியராஜன் பதவி உயர்வு மூலம் இன்னும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.