லைஃப் சான்றிதழ் – ஓய்வூதியதாரர்கள் மகிழும் வகையிலான புதிய திட்டம்!

புதுடெல்லி: இபிஎஃப்ஓ(EPFO) திட்ட ஓய்வூதியதாரர்கள், ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும், ஆன்லைனில் லைஃப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையால் சுமார் 64 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம், ஒரு ஆண்டில் தங்களுக்கு வசதிபடும் எந்த நேரத்திலும் லைஃப் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு முன்னர், ஒரு ஆண்டின் நவம்பர் 1 முதல் 30ம் தேதிக்குள் அதை சமர்ப்பித்துவிட வேண்டுமென்ற விதிமுறை இருந்தது. மேலும், அப்படி தவறியோருக்கு, அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்பட்டுவிடும் என்ற சிக்கல் இருந்தது.

தற்போதைய புதிய நடைமுறையின்படி, சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து, அடுத்த ஆண்டின் அதே தேதிவரை செல்லுபடியாகும் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சான்றிதழ் முறை கடந்த 2015-16ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, பென்சன்தாரர்கள் பயோமெட்ரிக் முறையில் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதனைப் பயன்படுத்தி சான்றிதழை சமர்பிக்கலாம்.

பென்சன்தாரர்கள் லைஃப் சான்றிதழை, வங்கி மேலாளரின் அல்லது கெஸடட் அதிகாரியின் கையொப்பம் அடங்கிய சான்றிதழை நேரடியாக சென்று அளிப்பதற்கு பதில், எந்த EPFO அலுவலகத்திலோ அல்லது ஓய்வூதியம் வழங்கப்படும் வங்கியிலோ, UMANG app மூலமோ அல்லது பொது சேவை மையங்களிலோ இதனை சமர்பிக்கலாம்.

லைப் சான்றிதழை சமர்பிப்பதற்கு இபிஎப்ஓ அலுவலகத்திற்கு எந்த ஆவணத்தையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஆதார் எண், பென்சன் பேமன்ட் ஆர்டர் எண், வங்கி விபரம், மொபைல் எண் இருந்தாலே பயோமெட்ரிக் முறையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிஜிட்டல் லைஃப் சான்றிதழை சமர்பிக்கலாம்.