துபாய்: வரும் 2020ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் சில புதிய அணிகள் இணையவுள்ளன. அந்த அணிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்வுசெய்வதற்கான சில புதிய நடைமுறைகளையும் ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பையில் பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன், நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் புதிதாகப் பங்கேற்கின்றன.

ஆனால், இவை தகுதிச்சுற்றில் கலந்துகொள்ள வேண்டும். இவற்றில் சிறப்பாக செயல்படும் அணிகள் மட்டுமே தேர்வாகும். இவை ‘ஏ’ மற்றும் ‘பி’ என்ற இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணிக்கு இலங்கையும் மற்றொரு அணிக்கு வங்கதேசமும் தலைமை வகிக்கும்.

பப்புவா நியூ கினியா, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் இலங்கை தலைமையிலான ‘ஏ’ பிரிவிலும், நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் வங்கதேசம் தலைமையிலான ‘பி’ பிரிவிலும் இடம்பெறும்.

இரண்டு குழுக்களின் முதல் இரண்டு டாப் அணிகள், ‘சூப்பர் 12’ நிலைக்குத் தகுதிபெறும். ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடிக்கும் அணியும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இருக்கும் பிரிவில் இணையும்.

‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் இரண்டாமிடம் பிடிக்கும் அணியும், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கும் பிரிவில் இணையும்.

டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 15ம் தேதி மெல்போர்னில் நடைபெறும்.