Random image

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் புதிய சொத்துவரி வசூல்

சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதியில் நாளை முதல் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம்  வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை இரண்டாவது அரையாண்டும் கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி (Property Tax) உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.. இதன் காரணமாக மாநிலத்திற்கு வருவாய்பு இழப்பு  ஏற்படுவதாகவும், சொத்து வரியை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, சொத்து வரியை உயர்த்த அரசுக்கு உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது.

அதையடுத்து கடந்த ஜூலை மாதம் 23ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு ஐம்பது விழுக்காட்டுக்கு மிகாமலும், வாடகைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு நூறு விழுக்காட்டுக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு நூறு விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வரி தொடர்பாக  சுயமதிப்பீடு விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்பட்டது. சொத்து வரி சுயவிவரங்களை பெற்று அதன் அடிப்படையில் வரியினை நிர்ணயிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுவரை பெறப்பட்டு வந்த படிவங்களில் உள்ள தகவல்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பழைய அளவின் படி உள்ள சொத்துக்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள வரி மட்டுமே கூடும் என்றும், சென்னையில்  12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், நேற்று இரவு வரை 8 லட்சம் பேர் மட்டுமே  விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். அவர்களில் ஒன்றரை லட்சம் பேர் ஆன்லைனில் தாக்கல் செய்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

அதனால் நாளை முதல் உயர்த்தப்பட்ட சொத்துவரி வசூலிக்கப்படும் என்றும்,  முதல் அரையாண்டு வரியினை ஏற்கனவே  செலுத்தி இருந்தாலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியின் வித்தியாச தொகையினை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்  என்றும் கூறினார்.