சென்னை: திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, சேலம் மாம்பழம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட மொத்தம் 7 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு மற்றும் ஈரோடு மஞ்சள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999ம் ஆண்டு பலவகையான புகழ்பெற்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது இந்திய அரசு. இதன்படி, அந்தக் குறிப்பிட்ட பொருட்களை பிற பகுதியினர் விற்பனை செய்வது மற்றும் போலிகளை தயாரிப்பது போன்றவைகளை தடுக்க முடியும்.

திண்டுக்கல் பூட்டின் வரலாறு 150 ஆண்டுகளுக்கு முந்தையது. கடந்த 2013ம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் அதே ஆண்டு விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில், திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஓசூர் ரோஜா, ராஜபாளையம் நாய், கோடாலிகருப்பூர் சேலை ஆகிய 7 பொருட்களுக்கு புவிசாரி குறியீடு கிடைத்துள்ளது.