சென்னை: முகூர்த்த நாளையொட்டி நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத்துறை ரூ.123.35 கோடி வருவாயை ஈட்டி உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பத்திரப்பதிவு துறையும் மூடப்பட்டது. இதனால்  தமிழகஅரசுக்கு வரவேண்டிய வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து,  தமிழகத்தில்,  பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.   அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் அணிந்து பணிகளுக்கு வந்தனர். தினசரி குறிப்பிட்ட அளவிலேயே பத்திரப்பதிவுகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பொதுமுடக்கம், இ-பாஸ் காரணமாகவும், கொரோனா அச்சுறுத்தல் காலரணமாக  மக்கள் வெளியே நடமாடவே தடை விதிக்கப்பட்டிருந்ததால்,  பத்திரப்பதிவு அலுவலகத் திலும் பத்திரங்கள் ஏதும் பதியப்படாத நிலையே தொடர்ந்து வந்தது.
இதையடுத்து பொதுமுடக்கத்தில் இருந்து மேலும் பல தளவர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெறத் தொடங்கியது. அதையடுத்து,  பத்திரப்பதிவு அலுவலகங்களின் வேலை நேரத்தையும் மாலை 5 மணி வரை நீட்டித்தது.
இந்த நிலையில்,  ஐப்பசி மாத முகூர்த்த நாளான நேற்று  (29-10-2020) தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  ஏராளமானோர் சொந்துக்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் வகையில், மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, பத்திரப்பதிவு அலுவலகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  நேற்று ஒரே நாளில் மட்டும் 20,307 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், அதன்மூலம் அரசுக்கு ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளதுள்ளது என்று தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. மேலும், இது  பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல் என்றும், புதிய சாதனை என்றும் கூறப்படுகிறது.