சென்னை: கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படுவதற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கருணை அடிப்படை பணி என்பது, பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் திடீரென இறந்தாலோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாக முன்கூட்டியே ஓய்வுபெற்றாலோ, அவரின் குடும்பத்தினர் ஒருவருக்கு, சம்பந்தப்பட்டவரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டம் கடந்த 1972ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தாலும், இந்த விஷயத்தில் தற்கால சூழல்களை முழுமையாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி அறிவிப்பு வெளியிடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அதன்படி தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பில், “அரசு ஊழியர்கள் பணியின்போது இறந்தாலோ அல்லது உடல்நலப் பிரச்சினை தொடர்பாக 53 வயதிற்குள் ஓய்வுபெற்றாலோ, அவரின் வாரிசுகளுக்கு அரசுப் பணியை கல்வித்தகுதியின் அடிப்படையில் வழங்கலாம்.

அதேசமயம், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு இந்த விதி பொருந்தாது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.