சீன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள்!

புதுடெல்லி: சீனாவிலிருந்து வரும் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், சுமார் 5000 தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய ஒழுங்குமுறைகள், உள்நாட்டு உற்பத்தி செயல்முறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்று கூறப்படுகிறது. தொழில்துறை பொருட்கள், டெலிகாம் தயாரிப்புகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்டீல் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு வலுசேர்ப்பதாய் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிக இறக்குமதி பொருட்களைக் கையாளும் அமைச்சகங்களை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. டெலிகாம், ரசாயனம், தொழில்துறை மற்றும் கனரக தொழில்துறை உள்ளிட்ட அமைச்சகங்களே அவை.

புதிய கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளின் மூலம்தான், மலிவான பொருட்களின் (குறிப்பாக சீனப் பொருட்கள்) இறக்குமதி தொடர்பாக ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும் மற்றும் இந்தியளவிலான தயாரிப்புகளை ஊக்குவிக்க முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.