குலசேகரப்பட்டணத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம்? – கூறுகிறார் இஸ்ரோ தலைவர் சிவன்!

பெங்களூரு: தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகேயுள்ள குலசேகரப்பட்டணத்தில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவிக்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்.

நிருபர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த விண்கலமானது லேண்டர் மற்றும் ரோவர் மாதிரியில் இருக்கும்.

சந்திராயன் 2 திட்டம் தோற்றதற்கு காரணம், லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதுதான். ஆனால், ஆர்பிட்டர் செயல்பாடு நின்றுவிடவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. இதன்மூலம் அடுத்த 7 ஆண்டுகளுக்கு பல வானியல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

ககன்யான் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பவுள்ள இத்திட்டத்திற்கு இதுவரை 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பயிற்சி செயல்முறைகள் விரைவில் துவங்கும். மேலும், 6 ஆய்வு மையங்களும் அமைக்கப்படவுள்ளன” என்றார் சிவன்.