ஏ டி எம் களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது : புது உத்தரவு

டில்லி

ங்கி ஏ டி எம்களில் கொள்ளை நடப்பதை தவிர்க்க இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்ப்பக்கூடாது  என்னும் உத்தரவு வரும் பிப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது.

வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.15000 கோடி பணம் இவர்களால் ஏடிஎம்களில் நிரப்படுகின்றன.   ஒரு சில நேரங்களில் இந்தப் பணம் தனியார் பெட்டகங்களில் வைக்கப்படுகின்றன.   இப்பணியில் 8 ஆயிரம் பாதுகாப்பு வாகனங்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன.

இந்த பாதுகாப்பு வாகனங்கள் கடத்தப்படும்  சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன.  அத்துடன் இரவு வேளைகளில் பல இடங்களில் ஏடிஎம் மில் பணம் நிரப்பும் போது கொள்ளை அடிக்கபடும் சம்பவங்களும் நிகழ்கின்றன.   இவைகளை தவிர்க்க உள்துறை அமைச்சகம் சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

”இரவு 9 மணிக்கு மேல் நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கூடாது.   அதே போல் மாலை 6 மணிக்கு மேல் கிராமங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கூடாது.    மாலை 4 மணிக்கு மேல் நக்சல்கள் பாதிப்பு பகுதியில் பணம் நிரப்பக் கூடாது.

பணம் நிரப்பும் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து மதியத்துக்குள் பணத்தைப் பெற்று கவச வாகனங்களில் எடுத்து செல்ல வேண்டும்.   வாகனத்தில் ஒரு ஓட்டுனர் 2 பாதுகாவலர்கள் 2 ஏடிஎம் அதிகாரிகள் இருக்க வேண்டும்.    பணத்தை ஏற்றும் போதும், இறக்கும் போதும்,  உணவு சாப்பிட மற்றும் கழிவறைக்கு செல்லும் போது ஒரு பாதுகாவலர் வாகனத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள்,  பணத்தை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்கள் என்பதை காவல்துறையினர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இது தவிர தனியார் மூலம் அவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என பல விதிகளை அறிவித்துள்ள அமைச்சகம் இந்த விதிகள் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.