மருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை:
நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய 2020-21ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதனிடையே, நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வை தள்ளிவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. கலந்தாய்வுக்கான புதிய தேதிகள் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தோ்வுக் குழுச் செயலா் செல்வராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வருகிற 30ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

நவம்பர் 30ஆம் தேதி நீட் தேர்வில் 610 முதல் 630 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும், டிசம்பர் 1ஆம் தேதி 592 முதல் 609 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும், டிசம்பர் 2ஆம் தேதி 571 முதல் 591 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான பட்டியலை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

You may have missed