புதிய தலைமைச்செயலக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை:

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக தலைவர், ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து திமுக தாக்கல் செய்த வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு கடந்த 2015ம்ஆண்டு உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

ஆனால், ஆணைய உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வந்ததை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆணையம் மற்றும் ஆணைய நீதிபதி குறித்து கடுமையாக கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து,  ஆணைய தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி  ரகுபதி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஆணையத்துக்கு தலைவர் இல்லாத நிலையில், விரைவில் தலைவரை நியமிக்கும்படி சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஆணையத்தை  கலைத்துவிட்டு, வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு இதுகுறித்து பதில் அளிக்கும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.