புதுடெல்லி: எஸ்ஐஇஎன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பாதுகாக்கப்பட்ட புலனாய்வு தளம், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பின் எல்லைக்குள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன்மூலம், பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை மிக விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும், ஆன்லைன் வழியாகப் பரிமாறிக்கொள்ள வழியேற்பட்டுள்ளது. புலனாய்வு துறை, என்ஐஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் நிதிசார்ந்த புலனாய்வு அமைப்பு ஆகியவற்றுக்கிடையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

இந்த எஸ்ஐஇஎன் வழியாக, புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட மொத்தம் 13 ஏஜென்சிகள், ஆன்லைனில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் இந்த எஸ்ஐஇஎன் தளத்தைப் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து ஏஜென்சிகளுக்கு இடையிலும் ஊடாடும் ஒரு பொதுவான அமைப்பாக மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.