வரலாற்றில் சில திருத்தங்கள்.. ( கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்!)

அத்தியாயம்: 1

அரபு எண்கள் – உண்மையில் அரபு எண்களா? : இரா. மன்னர்மன்னன்

’அரபு எண்கள் வேண்டாம், வாகனங்களில் தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்’ – என்ற குரல் இந்த மார்ச் 21ஆம் தேதியில் மீண்டும் உரத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. வாகனங்களில் பிராந்திய மொழிகளில் பதிவு எண்களை எழுதினால், போக்குவரத்து வாகனச் சட்டம் 50,51-இன் படி, அபராதம் விதிக்கப்படுகிறது என்பதால் அதனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழர்கள் தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் பல தமிழ் அமைப்புகள் பல்லாண்டுகளாக கோரிக்கைகளை வைத்து வருகின்றன. தமிழ் மொழி மீதுள்ள பற்றால் இது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்களின் கருத்துகளையும் அறிந்து போராடினால் அது இன்னும் வலிமையையும் சிறப்பையும் கொடுக்கும். ஏனெனில் அரபு எண்கள் என்று நாம் இப்போது சொல்லும் எண்களும் உண்மையில் தமிழ் எண்களே!.

இன்று நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் 1,2,3 – ஆகிய எண் வடிவங்களை நாம் அரபு எண்கள் என்று அழைக்கிறோம். தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களிலும் அவை அரபு எண்கள் என்றே குறிக்கப்பட்டு உள்ளன. இதற்கு மாறாக க,உ – என்று துவங்கும் எண் வரிசை அரபு எண்களுக்கு இணையான தமிழ் எண்களாகக் கொடுக்கப்பட்டு உள்ளன. வாய்ப்பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தவர்கள் இந்த நேரத்தில் அதை நினைவுக்குக் கொண்டு வந்திருப்பீர்கள்.

தற்போது பயன்பாட்டில் உள்ள எண்களை நாம் ஏன் அரபு எண்கள் என்று அழைக்கிறோம் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இப்படி அழைக்க மாட்டோம். ஏனென்றால் இந்த உலகம் முழுமையும் உள்ள மக்கள் இவற்றை அரபு எண்கள் என்று அழைத்தாலும் அதை மறுக்க வேண்டிய கடமையைப் பெற்ற தமிழர்கள் தாங்களே தங்கள் எண்களை அவ்வாறு அழைப்பதும், அடுத்த தலைமுறைக்கும் அவ்வாறே கற்பிப்பதும் மிகுந்த வேதனைக்கும் அவமானத்துக்குமே உரியது.

1,2,3 – என்று துவங்கும் இந்த எண் வரிசையை இன்று நேற்று அல்ல கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழ் கூறும் நல்லுலகினர் ’அரபு எண்கள்’ என்றே அழைத்து வருகின்றனர்.

கடந்த 1961ஆம் ஆண்டில் இந்திய தலைநகர் புது டில்லியில் மத்திய கல்வி ஆலோசனைக் குழுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் குழுக்கூட்டத்தில் ‘உலகில் வழங்கிவரும் அரபி எண்களையே இந்தியாவில் பயன்படுத்துவது’ என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அப்போது ‘கல்விக்கு அராபிய எண்களே – ஆலோசனைக் குழு முடிவு’ என்ற தலைப்பில் பத்திரிகைச் செய்திகளும் வெளியாயின. அந்தக் கூட்டத்தில் அன்றைக்குத் தமிழகத்தின் கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாற்றுக் கருத்து எதனையும் கூறாமல் இந்தத் தீர்மானத்தின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

இதனைக் கண்டு வேதனையுற்ற பாரதிதாசன் தனது குயில் இதழில் உடனடியாக ‘அராபிய எண்கள் தமிழ் எண்களே’ என்று கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில்

’ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் காண்க, கண்டால் இன்றைய 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர். அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக் கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம். ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்திற்கு உள்ளாயிற்று. இது இயற்கைதான்…’ என்று பாரதிதாசன் குறிப்பிட்டு உள்ளார்.

இதனைக் கூறிய ஒரே நபர் பாரதிதாசன் அல்ல. தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களும் தனது ’மொழி வரலாறு’ என்ற நூலில் 1,2,3 என்று துவங்கும் எண்களைத் தமிழ் எண்கள் என்றே கூறி, கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை நிறுவி உள்ளார். அவரது ஆய்வின் ஒரு பகுதி,

’1,2,3,4,5,6,7,8,9 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கள் பழைய தமிழ் எண்களே’ – என்று கூறுகிறது.

’இன்று அரபி எண்கள் என்று வழங்கிவரும் எண்கள் எல்லாம் பழங்காலத் தமிழகத்தில் புழங்கிய எண்களே, அவற்றை அரேபியர்கள் நம்மிடம் இருந்து பெற்றே பயன்படுத்தினர். இங்கே தமிழகத்தில் காலத்தால் தமிழின் எழுத்துகள் மருவியபோது அவையும் மருவின. அவற்றின் மருவிய வடிவம் க,உ – என்பதாக இப்போது புழங்குகின்றது. ஆனால் அராபிய எண்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்த வடிவத்திலேயே இன்றும் உள்ளன. இதனால் இரண்டும் சற்று மாறுபட்டு இருந்தாலும் இரண்டும் ஒன்றே’ – என்பதே இருவரும் ஆதாரபூர்வமாக முன்வைக்கும் வாதம். அதற்கான சான்றுகளும் மிகவும் எளிமையானவை.

தமிழ் எண்களின் வளர்ச்சி

 

இன்றைய தமிழ் எண்களின் உள்ளே அன்றைய தமிழ் எண்கள்

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுகள் வெளிவந்த பின்னர் தமிழக அரசும் மக்களும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டனரா, அறிவிலே ஒளி பெற்றனரா என்று பார்த்தால், இல்லை. சொந்த எண்களை அரேபியர் எண்கள் என்று சொல்லும் வழக்கமே தமிழகத்தில் பின்னும் தொடர்ந்தது.

கடந்த 1996 ஆம் ஆண்டில், தமிழக சட்டப்பேரவையில், அப்போதைய பேரவை உறுப்பினர் (முன்னாள் எதிர்கட்சித் தலைவர்) குமரி அனந்தன், அன்றைய தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம்

‘உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா?’ என்று கேட்டார். அதற்கு தமிழ்க்குடிமகன்,

இன்றைய தமிழ் எண்களின் உள்ளே அன்றைய தமிழ் எண்கள்

‘இது குறித்து முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என இருக்கிறோம்’ என்று பின்னர் பதில் சொன்னார். ஆகத் தமிழக சட்டமன்றம் முழுமையுமே அந்த எண்களை அரேபிய எண்களாகவே ஏற்றுக் கொண்டது. மக்கள் பிரதிநிதிகளை நிலையே இது என்றால் மக்களின் நிலை?.

தமிழ் அழிப்பு எது? தமிழ் வளர்ப்பு எது? – என்று தமிழர்களுக்கே தெரியாமல் போன கொடுமை தமிழகத்தில் பல காலங்களில் நிகழ்ந்து உள்ளது. அதற்கான சிறந்த உதாரணமாக கடந்த 1998ஆம் ஆண்டில் ‘ஊர்திகளில் தமிழ் எண் பலகைகள்’ குறித்து வெளியான அரசாணையைக் கூறலாம். முன்னர் 1996ல் சட்டமன்றத்தில் எழுந்த விவாதத்தின் தொடர்ச்சியாகவும் இதனை நாம் பார்க்க லாம். அந்த அரசாணை மூலம் ‘வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்ற அனுமதி பரந்த மனதோடு வழங்கப்பட்டது. இன்றும் தமிழ் மீது பற்றுடைய பல அமைப்புகள் ‘அரபு எண்கள் வேண்டாம், தமிழ் எண்களைப் பயன்படுத்துவோம்’ என்று தீர்மானங்கள் போட்டு, அவற்றை நிறைவேற்றியும் வருகின்றன.

’எவை தமிழ் எண்கள்?’ – என்ற வரையறையைத் திரும்பிப் பார்க்காமல் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிப்பது தமிழர்கள் தங்கள் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்களே பிறருக்குத் தாரை வார்ப்பதைத் தவிர வேறு எதாகவும் இருக்க முடியாது. 1,2,3 – என்று துவங்கும் எண் வரிசையைப் பயன்படுத்தும் நாமே நம்மைச் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோம்

1.   இப்போது தமிழ் எண்கள் என்று கற்பிக்கப்படும் எண்களில் உள்ள 0 ஆனதும், இப்போது ’அரபி எண்கள்’ என்று அழைக்கப்படும் எண்களில் உள்ள 0 ஆனதும் ஒன்றாக உள்ளது எப்படி?

2.   பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது இந்தியாதான் – என்று உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆரியபட்டர் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்திய முதல் கணித ஆய்வாளர் ஆவார். அப்படி உள்ளபோது மற்ற 9 எண்களை அரேபியர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

3.   அரேபிய மொழி தமிழ், ஆங்கிலம் போன்றவற்றைப் போல இடமிருந்து வலமாகப் பயன்படுத்தும் மொழி அல்ல. வலமிருந்து இடமாகப் பயன்படுத்தும் மொழி. அப்போது அவர்கள் தங்கள் எண்களையும் வலமிருந்து இடமாகத்தானே பயன்படுத்த வேண்டும்? ஆனால் அவர்கள் எண்களை மட்டும் இடமிருந்து வலமாகப் பயன்படுத்துவது ஏன்?

4.   உலகம் முழுவதும் புழங்கும் எண்கள் அரபி எண்கள் என்றால், அராபியர்கள் ஏன் தங்களுக்கு என்று தனி எண் வடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்? 1,2.3 – வரிவடிவ எண்களுக்கு உரிமை கொண்டாடுவதில் அவர்கள் ஏன் ஆர்வம் காட்டாமல் உள்ளார்கள்?

5.   உலகமே அரபி எண்கள் என்று ஏற்றுக் கொண்ட எண்களை அராபியர்கள் ஏன் ‘இந்து (இந்திய) எண்கள்’ என்று அழைக்கிறார்கள்?

6.   முழு எண்களுக்கான வரிவடிவங்களை அரபு எண்கள் என்று அழைக்கிறோம். பின்ன எண்களுக்கான அரபு வரிவடிவங்கள் எங்கே? உதாரணமாக ¼ என்பதைத் தமிழில் ‘வ’ என்றும், 1/8 என்பதைத் தமிழில் ‘அ’ என்றும் குறிக்கலாம். இதுபோன்ற தனி வடிவங்கள் அரபியில் இல்லாமல் போனது எப்படி?

இவற்றின் விடைகளை நாம் சிந்திக்க ஆரம்பித்தாலேயே நாம் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை நம்மால் உணரமுடியும். கன்னித் தமிழ் கணிதத்தின் தமிழும் கூட. ஒன்றின் கீழ் எட்டு – என்பதற்குக் கீழான எண்ணளவுகள் உலகாளும் ஆங்கிலத்தில் இன்றும் கூட இல்லை எனும் போது 1/210400 என்ற எண்ணளவுக்கு வாய்ப்பாடு வகுத்துப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். (’இம்மியளவு’ என்று இன்றும் தமிழகத்தில் சொல்கிறோமே, இந்த மதிப்புதான் இம்மி.) மிகக் குறைந்த மதிப்புடைய எண்ணளவாக 1/2323824530227200000000 என்ற மதிப்பில் ‘தேர்த்துகள்’ என்ற அளவீடு பண்டைய தமிழகத்தில் புழங்கியது.

அரபு மொழியிடம் இருந்து எண்களைக் கடன் வாங்கிய ஐரோப்பியர்கள் அவற்றை ‘அரபு எண்கள்’ என்று அழைக்கும் போது, அவற்றைக் கடன் கொடுத்த தமிழர்களும் அவற்றை ’அரபு எண்கள்’ என்றே அழைப்பது அவமானத்திற்கும் அறிவுச் சிறுமைக்கும் உரியது.

இந்தியா முழுமையும், ஏன் உலகம் முழுமையுமே அந்த எண்களை அரபி எண்கள் என்று அழைத்தாலும், தமிழ் மக்களாகிய நாம் அவற்றைப் ‘பண்டையத் தமிழ் எண்கள்’ என்றே அழைப்போம். இவை அரபி எண்கள் அல்ல, தமிழ் எண்கள்’ என்று உலகுக்கும் உரக்கச் சொல்லுவோம்.

தமிழக எண்கள் அரபி எண்களானது எப்படி? – என்ற வரலாற்றுக்குப் பின்னால் தமிழக கணித அறிவு எப்படி மேற்கத்திய நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் அறிவதற்கான சாவி உள்ளது. அதைத்தான் நாம் அடுத்து ஆய்வுகள் செய்ய வேண்டும். விழிப்போமா?

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: New series: Focus on the history of some of the amendments; The series will explode!, Series: Arabic Numerals - is it fact Arabic numbers?, வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்!
-=-