சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதிகள்  அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகியதை தொடர்ந்து நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளதாக  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து,  ஸ்டெர்லைட் ஆலையை  கடந்த ஆண்டு தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலைய மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை  நீதிபதிகள் சசிதரன், நீதிபதி ஆஷா கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது.

இதற்கிடையில், உயர்நீதி மன்ற மதுரை கிளையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, அதிலும் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையில்  இருந்து நீதிபதி சசிதரன், ஆஷா அமர்வு விலகுவதாக அறிவித்து, புதிய அமர்வை ஏற்படுத்தும்படி தலைமை நீதிபதிக்கு  பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை தலைமைநீதிபதி உருவாக்கி உள்ளார். இந்த அமர்வில், நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இனிமேல் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை விசாரிப்பர்.