பழனியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரி விழாவில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பழனியில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார்.

சித்த மருத்துவக் கண்காட்சி சென்னை  அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் இன்று தொடங்கியது.

இந்த  கண்காட்சியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவருடன் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஆண்டு மலரை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் சித்த மருத்துவத்துக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு உதவிகள் செய்துள்ளதாகவும், சமீபத்தில் 105 சித்த மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், பழனியில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றும், அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

அரும்பாக்கத்தில் நடைபெற்று வரும் சித்த மருத்துவ கண்காட்சியில், தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவம், மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்கள், அதுகுறித்த விளக்கம் மற்றும்   ஏராளமான மூலிகை செடிகளும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி இன்று முதல்  18-ம் தேதி வரை நடைபெறுவதாகவும், பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக இந்த கண்காட்சியை கண்டு தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.