’’ஆட்சிக்கு வந்தால் பழி வாங்குவோம்’’ பா.ஜ.க.தலைவரின் பகிரங்க எச்சரிக்கை..

தேர்தல் வெற்றிக்கு அரசியல் கட்சிகளின் ‘கோஷங்கள்’’ ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

மே. வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற உறுதி பூண்ட மம்தா பானர்ஜி, 2011 ஆம் ஆண்டில் ‘’ பழிவாங்குதல் இல்லாத ஆட்சி மாற்றம்’’ ( CHANGE NOT REVENGE) என்ற கோஷத்தை முன் வைத்தார்.

ஆட்சியைப் பிடித்தார்.

இப்போது மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பா.ஜ.க. வும் புதிய கோஷத்தை முன் வைத்துள்ளது.

என்ன முழக்கம் தெரியுமா?

‘’ ஆட்சியை மாற்றுவோம். பழி வாங்குவோம்’’.

(CHANGE AS WELL AS REVENGE) என்பது தான் அந்த கோஷம்.

இந்த முழக்கத்தை மே.வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், தனது புகைப்படத்துடன் , சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

‘’2011 ஆம் ஆண்டு தேர்தலின்போது, ‘’பழி வாங்குதல் இல்லாத ஆட்சி மாற்றம் ‘’ என்று முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்தது, திரினாமூல் காங்கிரஸ். ஆனால் இந்த ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே தான் இந்த கோஷத்தை முன் வைத்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக விரோதிகளை ( திரினாமூல் காங்கிரஸ்?) பழி வாங்குவோம்’’ எனத் தனது முழக்கத்துக்கு நியாயம் கற்பித்து உள்ளார், திலீப் கோஷ்.

ஆனால் ,இந்த முழக்கத்துக்கு பா.ஜ.க.விலேயே ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘’இப்படி எல்லாம் கோஷம் போட்டால் யார் ஓட்டுப் போடுவார்கள்? என்பது அவர்கள் கேள்வி.

-பா.பாரதி