கேலியால் மனமுடைந்து கதறிய சிறுவனுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..!

பிரிஸ்பேன்: தன் உருவத்தை சக மாணாக்கர்கள் கேலி-கிண்டல் செய்வதால் மனமுடைந்து தன்னை சாக அனுமதிக்குமாறு கதறியழுத சிறுவன் குவாடனுக்கு, ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியைத் துவக்கி வைக்கும் கவுரவரம் வழங்கப்பட்டது.

அவனுடைய கதறலை அவனின் தயார் வீடியோவாக பதிவுசெய்து, சமூகவலைதளத்தில் பதிந்து, இதுபோன்ற குறைபாடுள்ளவர்களை யாரும் கிண்டல் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சிறுவன் குவாடனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு குவிந்தது. பல ஹாலிவுட் நட்சத்திரங்கள், குவாடனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். குவாடனை போலவே குள்ள உருவ அமைப்பு கொண்ட ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவனுக்கு ஆதரவாக டுவிட்டர் மூலம் நிதித் திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், ரூ.3 கோடி நிதி கிடைத்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற உள்ளூர் ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் கவுரவும், சிறுவன் குவாடனுக்கு அளிக்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறுவன் குவாடன் பந்துடன் நடந்து வருகையில், திரண்டிருந்த கூட்டத்தினர், கைதட்டி ஆரவாரம் செய்தனர். உருவ கேலி காரணமாக மனமுடைந்து போயிருந்த சிறுவனுக்கு, இந்தச் சம்பவம் பெரும் உற்சாகத்தை அளித்ததாக அவனது தாயார் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறுவன் குவாடனுக்கு வயது 18 என்றும், இவை அனைத்துமே, கவன ஈர்ப்புக்காக அவனது தாயால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும், சமூக வலைதளங்களில் தனியே ஒரு தகவல் வலம் வருகிறது.