தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம்: முதலமைச்சர் வெளியீடு

--

சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

அதன்படி இந்த ஆண்டு 1வது, 6வது, 9வது மற்றும் 11வது வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பாடத்திட்டங்கள் மாற்றப்படாத நிலையில், தற்போதைய நிலையில் தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில்  புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு கூறியது.

கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி “தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு  அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கல்வி முறையை மேம்படுத்த முனைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன்  தலைமையில் ‘கலைத்திட்ட வடிவமைப்புக் குழு’ உருவாக்கப்பட்டு, அவர்களுடன்  பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்  உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

அதையடுத்து அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதை பொதுமக்கள்  மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்துள்ளபடி 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைத்து வகுப்பு களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்களை படிப்படியாக  மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த கல்வியாண்டில்  1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு வரும் ஆண்டு புதிய பாடத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்களை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

இந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.