சென்னை,

த்திய அரசு நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்திற்கு வரைவு தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட நிபுணர் குழுவால்  உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழு கருத்துரைகளின்படி தயாரிக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலைத்திட்ட வடிவமைப்புக் குழு பல்வேறு நிலைகளில் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து கலைத் திட்ட வடிவமைப்பில் இடம் பெற வேண்டிய கருத்துகளைப் பெற்று, அக்கருத்துகள் கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவில் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 தொடர்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆகிய பாடவாரியாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டம், பல்வேறு மாநில வாரியங்களின் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. வகுப்பு வாரியாக, பாட வாரியாக துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பாடவல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டு அதில் பாடத்திட்ட ஒப்பீட்டு அறிக்கை விவாதிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கலைத்திட்ட வடிவமைப்பு குழு வரைவு அறிக்கை மற்றும் வரைவு பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய விவரங்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக, பாடவாரியாக, www.tnscert.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது.

இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், நம் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் போது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகளை அடிப்படையாகக்கொண்டு பாடத்துணை தலைப்புகள் இடம் பெறும். மேலும், மாணவர்களின் சிந்தனையை தூண்டுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், தொடர்புடைய துறைகளில் சமீப கால தொழில் நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட ஆர்வமூட்டும் வகையிலான விவரங்களும் புதிய மதிப்பீட்டு முறையும் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தினை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் படித்துப் பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை இணைய வழியே பதிவேற்றம் செய்திடலாம். மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வரைவு பாடத்திட்டம் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் 15 நாள் வரை இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

அனைத்து தரப்பினரின் கருத்துக்களை பெற்று அவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்கள் செய்த பின், அரசின் ஒப்புதல் பெறப்படும்

அதனை தொடர்ந்து பாடத்திட்டங்கள் எழுதும் பணி துவங்கி, 3 ஆண்டுகளில் 12 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு http://www.tnscert.org என்ற இணையத்தில் வெளியிடப்படுகிறது.