6,7,8,10,12வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடக்கம்! இணையம் மூலமும் பெறலாம்…

சென்னை:

மிழகத்தில் ஜூன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,  6,7,8,10,12 ஆகிய வகுப்பு களுக்கான  புது பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமும் பாடப்புத்தங்கள் வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  பள்ளிக்கல்வி அலுவலகத்தில்  6,7,8,10,12 ஆகிய வகுப்பு களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.  பெற்றோர்கள், மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

12ஆம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கு இரு தொகுதி களுக்கு பதில் ஒரே பாட புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாடநூல்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு பாட நூல்களின் விலை:  தமிழ் – ரூ.130, ஆங்கிலம் – ரூ.120, கணக்கு – ரூ.180, அறிவியல் – ரூ.180

பிளஸ் 2 வகுப்பு பாட நூல்களின் விலை:  தமிழ் – ரூ.120, சிறப்புத் தமிழ் – ரூ.150, ஆங்கிலம் – ரூ.130, கணக்கு பகுதி-1 – ரூ.170, இயற்பியல் பகுதி-1 – ரூ.180, வேதியியல் பகுதி-1- ரூ.160, தாவரவியல் – ரூ.170, விலங்கியல் – ரூ.170, பொருளியல்- ரூ.170, வணிகவியல் – ரூ.160, கணக்குப் பதிவியல் – ரூ.180 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2  வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.  நிகழாண்டில்,  3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாட நூல்கள் விற்பனை, சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் திங்கள்கிழமை  தொடங்கியது.

இதேபோல, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல்கள் கிடைக்கும்.  விடுபட்ட வகுப்புகளுக்கான விற்பனை விரைவில் தொடங்கும்.  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 5 கோடி இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக பாடநூல்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in  என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.  இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  இதுதவிர தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

வழக்கம்போல் 60 சதவீத பாடநூல்கள் இலவச விநியோகத்துக்கும்,  40 சதவீத பாடநூல்கள் விற்பனைக்காகவும்  அச்சிடப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.