காய்கறிகள் விற்பனை – சென்னையில் புதிய மையங்களை துவக்கிய தோட்டக்கலைத் துறை!

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்த அம்மா பூங்காவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை மையத்தைத் துவக்கியுள்ளது தமிழக தோட்டக்கலைத் துறை.

இதுகுறித்து கூறப்படுவதாவது; தோட்டக்கலைத்துறை மூலமாக, சென்னையில் நகரில் பூங்காக்கள், பண்ணைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

இ-தோட்டம் திட்டம் வாயிலாக, ஆன்லைனில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, விற்பனை மையங்களின் எண்ணிக்கையை, தோட்டக் கலைத்துறை அதிகரித்து வருகிறது. அதன்படி, தற்போது கிண்டி தொழிற்பேட்டை அருகிலுள்ள அம்மா பூங்காவில் காய்கறிகள் விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் நாள்தோறும் காலை 7 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை, காய்கறி வகைகள் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வேளச்சேரியிலுள்ள பேரமவுண்ட் பியர்ல்ஸ் அடுக்குமாடி குடியிருப்பிலும் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் விற்பனை விரிவுபடுத்தப்படவுள்ளது.