துபாய்:

வுதி அரேபிய அரசின் விசா குறித்த புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்கு பணியாற்றி வரும் ஏராளமான வெளிநாட்டினர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் அடுத்த மாதம் முதல் நாடு கடத்தப்படுவார்கள் என சவூதி அரசு அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக வேலையிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது.

சவூதி கொண்டுவந்துள்ள புதிய விசா சட்டம் காரணமாக  அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். அவர்கள்  இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இவர்களில் பெரும்பாலோர் தென்னக மாநிலங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்து அதற்காக, “நிதாகத்’ என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது,

இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடு களைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.

புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் காரணமாக,  சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, முறையான  “ஒர்க் பெர்மிட்’ மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள, வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக தங்கள் நாடுகளுக்கு திரும்ப அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். சவுதி அரசின் புதிய சட்டத்தால், உலக நாடுகளை சேர்ந்த  ஐந்து லட்சம் பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், முறையான ஆவணங்கள் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் அவசர சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு வேலையின்றி தவித்து வரும் இந்தியர்களை, சவூதியில் அளிக்கப்பட இருக்கும் கொடுந்தண்டனையிலிருந்து காப்பாற்றும் வகையில்  இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியும் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 20,321 இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளதாகவும்,  இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 1,500 பேர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர தங்கள் பெயரை பதியாமல்,சட்ட விரோதமாக சவுதியில் தங்கியுள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாடு திரும்புமாறு , இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.