சென்னை: இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளின்போது, அந்த உறுப்புகளை இடமாற்றம் செய்வதற்கு செலவாகும் நேரமானது தற்போது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. பல நேரங்களில், இப்படியான தாமதம், சம்பந்தப்பட்ட உறுப்பையே தகுதியற்றதாக மாற்றிவிடுகிறது.

எனவே, இந்த சிக்கலை களையும் வகையில், சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனை, ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரிலுள்ள த ஆல்ஃப்ரட் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, உடல் மாற்றத்திற்கு உள்ளாகும் உறுப்புகளின் தரத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயத்தின் ஆயுள் வெறும் 4 மணிநேரங்கள்.

எனவே, அந்த நேரத்திற்குள் அதை மற்றொரு உடலுக்குள் பொருத்திவிட வேண்டும். அதேசமயம், உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட நுரையீரலின் ஆயுட்காலம் 6 மணிநேரங்கள். எனவே, அந்த நேரத்திற்குள் வேறு உடலுக்குள் அதை பொருத்திவிட வேண்டும்.

மெல்போர்னிலுள்ள ஆல்ஃப்ரட் மருத்துவமனையால் பின்பற்றப்படும் உறுப்பு பாதுகாப்பு அமைப்பின் மூலம், வெளியே எடுக்கப்பட்ட உறுப்புகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து, அதன் தரத்தையும் மேம்படுத்த முடிகிறதாம். ஒரு இதயத்தை வெளியே எடுத்து இந்த இயந்திரத்தில் பொருத்திவிட்டால், போக்குவரத்துக்கு உள்ளாகும் சமயத்தில், இதயத்தின் தொடர்ச்சியான இயக்கம் உறுதி செய்யப்படுகிறதாம்.

இந்த அமைப்பு மிகவும் நவீன தொழில்நுட்பம் சார்ந்தது. ஆனாலும், அதிக செலவில்லாமல் இதை பயன்படுத்த வேண்டிய வழிவகைகளை ஆராய வேண்டியுள்ளது என்று மியாட் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.