பொழுதுபோக்கில் புதுவரவுகள்… பின்னுக்கு போகும் டிவிகள்..

 

தைத்தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு நிகராக உள்ளது, இப்போது கொரோனாவால் வீட்டில் முடக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் நிலை.. பொழுதை கழிக்க அவர்கள் படாத பாடுகிறார்கள் என்பது அவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்புவதிலிருந்தே தெரிகிறது.
எவ்வளவு நேரத்தினை சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் அவர்கள் தொடர்ந்து செலவழித்துவிட முடியும்.

சமூக வலைதளங்கள் நிறைய இருந்தாலும் பகிர்வதற்கென்று புதிதாக ஏதும் இல்லாத நிலை. சொல்லப்போனால் இந்த ஊரடங்கிற்கு முன்னால் பெரிதும் பரபரப்பாக பிரபலமாக வலம் வந்த டிக்டாக் செயலி கூட, மனைவி கணவனை வேலை வாங்குவது, கொரோனாவை கேலி கிண்டல் செய்வது, டாஸ்மாக் கடை அடைப்பு இவைகளை பற்றிய வீடியோக்களை மட்டுமே திரும்ப திரும்ப பதிவேற்றி ஒருவித சலிப்பை தந்து எரிச்சலை உண்டாக்கி வருகிறது.

டிவி சேனல்களோ சொல்லவே வேண்டியதில்லை. விலை போகாத அறுவை படங்கள் அல்லது அடிக்கடி ரிபீட் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள் தான். இவைகளை எத்தனை முறை பார்ப்பது. இது தமிழ் சேனல்களுக்கு மட்டும் தான் என்றில்லை. பிரபலமான ஆங்கில மூவி சேனல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. செய்தி சேனல்களை திறந்தாலோ, சர்வமும் கொரோனா புராணம்.  இவ்வளவு பேருக்கு பாதிப்பு, மொத்தம் இவ்வளவு பேர் பலி என்று திரும்பத்திரும்ப புள்ளி விவரங்களை கிராபிக்ஸ் உபயத்தோடு காட்டி சொல்லிச் சொல்லியே சாகடித்துவிடுகிறார்கள்.

இப்படி, வெளியிலேயே செல்ல முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்து பைத்தியம் பிடிக்காத குறையாய் இருக்கும் பலருக்கும்பெரிதும் உதவியாய் இருப்பது இண்டர் நெட் சேனல்கள்கள் தானாம்.

முக்கியமாக இளைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு – அமேசான் ப்ரைம், நெட் பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜீ ப்ளஸ், ஜீ5 போன்ற இன்டர்நெட் சேனல்கள் இப்போதைக்கு மெயின் பொழுதுபோக்கு.

இவைகளில் நாம் நினைத்த படங்களை, எந்த மொழி பேதமுமின்றி தேர்ந்தெடுத்து ரசிக்கலாம். மேலும், நமது வேலைப்பளுவினால் பார்க்காமல் தவறவிட்ட முக்கிய திரைப்படங்களை தேடிப்பிடித்து இப்போது பார்த்து ரசிக்கலாம் என்கின்றனர்..

குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான அனிமேஷன் படங்கள் வரிசையில் காத்திருக்கிறன இதுபோன்ற இணையங்களில்,. வெறும் திரைப்படங்கள் மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. பலவிதமான நெட் சீரியல்கள், குறும்படங்கள், நெட்டில் மட்டுமே வெளியாகும் திரைப்படங்கள் என்று ஏராளமான வகைவகையாக கிடைக்கின்றது இவைகளில்.

மாதாந்திர சந்தாவினை செலுத்திவிட்டால் நினைத்ததை வீட்டிலிருந்தபடியே பார்த்து ரசித்து பொழுதை கழிக்க இந்த சேனல்கள் பெரிதும் உதவியாய் இருக்கின்றன என்று பூரிக்கின்றனர் பலரும.
மக்களின் கை, கால்களை கட்டி போட்டு விட்ட இந்த கொரோனா ஊரடங்கு நேரம், அரசின் ஆணைப்படி வீட்டை வெளியே வராமல், இருக்கச்செய்வதில் இந்த இணையத்தள சேனல்களின் பங்கு மிகப்பெரியது என்கின்றனர், பொழுது போக்கு அமைப்புகளை கண்காணிக்கும் வல்லுனர்கள்.

-லெட்சுமி பிரியா