சென்னையில் புத்தாண்டு விபத்து குறைவு: காவல்துறை தகவல்

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்து, கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறி உள்ளனர்.

கடந்த 31ந்தேதி இரவு புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு இளைஞர்கள் குதூகலமாக அடிப்பாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என போலீசாரும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

சுமார்  3,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் அதிகமாக கூடும் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும், புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியதில் பல இடங்களில் விபத்து ஏற்பட்டது. இதில்,  2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 150க்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்றுள்ள விபத்துக்கள், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு என்றும்,  கடந்த ஆண்டு  சென்னையில் மட்டும் 5 பேர் பலியானதோடு, 120 பேர் காயமடைந்தாகவும் கூறினார்.

ஆனால், இந்த ஆண்டு 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளதாகவும்,  179 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில்   84 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.