பெங்களூரு: கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக,  பள்ளிகளை திறப்பது மற்றும் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.  முன்னதாக, மாநிலத்தில கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க நிபுணர்கள் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.  அதன்படி கர்நாடகத்தில் அடுத்த மாதம் ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு,  கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்விஜயபாஸ்கர்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதில், மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது சற்று குறைந்துள்ளது.  இருந்தாலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.  மேலும்,  டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் கொரோனா 2-வது அலை வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தசரா, தீபாவளி பண்டிகைகளைப் போலவே வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்ப‌து, வாழ்த்தும் போது கை குலுக்குவதை தவிர்ப்பது, ஒருவரை ஒருவர் தழுவுவதை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி,  டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உணவகம், கேளிக்கை விடுதிகள், விருந்து நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.